கணியூரில் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, மக்காட்சோளம், தென்னை போன்ற பயிர்கள் முக்கியமான பயிர்களாக பயிரிடப் படுகின்றன. இதில், நெல் முக்கியமான பயிராக உள்ளது. அதிக மகசூல் தரும் பயிர்களாக முதலில் கரும்பும், இரண்டாவதாக வாழையும், மூன்றாவதாக நெல்லும் உள்ளன. மேலும், உளுந்து, பாசிப்பயிர், தட்டைப் பயிர், எள் போன்ற பயிர்களும் சூழ்நிலைக்கேற்பப் பயிரிடப்படுகின்றன.

நெல்

இங்கு,சம்பா மற்றும் குறுவை என்ற இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. சம்பா பருவமானது அக்டோபர் முதல் மார்ச் வரை நிலவுகிறது. குறுவைப் பருவமானது ஜுன் முதல் நவம்பர் வரை நிலவுகிறது. சம்பா பருவத்தில், ADT 39, ADT 45, CO 36, வெள்ளைப் பொன்னி போன்ற நெல் வகைகளும், குறுவைப் பருவத்தில், ADT 36, ADT 43, IR 50 போன்ற நெல் வகைகளும் பயிரிடப்படுகின்றன. 

வாழை

பூவன், ரஸ்தாலி, ரபர்ஸ்டா, மோரிஸ், கற்பூரவல்லி போன்ற வாழைப் பழ வகைகள் பயிரிடப்படுகின்றன.

கரும்பு

தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் தான் கரும்பு பூப்பூக்கின்றது. கணியூரிலும் அதே தட்ப வெப்ப நிலை நிலவுவதால் இங்கும் கரும்பு பூப்பூக்கின்றது.எனவே, இதைத் தவிர்க்க ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கரும்பு பயிரிடப்படுகின்றது.

வெற்றிலை

பச்சைக் கொடி மற்றும் கற்பூரவல்லி போன்ற வெற்றிலை வகைகள் பயிரிடப்படுகின்றன. ஆடி மாதம் வெற்றிலைக் கொடிகள் பயிரிடப்பட்டு, பயிரிடப்பட்ட 3 ஆவது மாதத்திலிருந்து குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு ஒருமுறை வெற்றிலைப் பறிக்கப் படுகின்றது.

மக்காச்சோளம்

பயனீர், காவேரி, கைசெல், ஸ்கார்பியோ மற்றும் லக்ஷ்மி போன்ற வகைகள் பயிரிடப்படுகின்றன. ஆடி மற்றும் தை மாதங்களில் பயிரிடப்படுகின்றன.

தென்னை

நெட்டை, குட்டை மற்றும் நெட்டை குட்டை போன்ற வகைகள் பயிரிடப்படுகின்றன.

பாசனங்கள்

கணியூரில் ஆற்றுப்பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம் நடைமுறையில் உள்ளது. இதில், அதிகபட்சமாக கிணற்றுப் பாசனமும், குறைந்தபட்சமாக ஆற்றுப்பாசனமும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆற்றுப்பாசனமானது 10 மாதங்களுக்கு நடைபெறும். 2 மாதங்கள் தூர் வாருதல் போன்ற பணிகள் நடைபெறும். மேலும், சொட்டு நீர்ப்பாசனமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வேளாண்மை நிலங்கள்

கணியூரில் சுமார் 500 ஏக்கரில் வேளாண்மை நடைபெற்று வருகின்றது. இதில் 300 ஏக்கர் நன்செய் நிலமாகவும் அதாவது நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களுக்கு உகந்ததாகவும் 200 ஏக்கர் புன்செய் நிலமாகவும் அதாவது மக்காட்சோளம் மற்றும் இதர பயிர் வகைகளுக்கு உகந்ததாகவும் உள்ளது.

வேளாண்மை மக்கள்

200 குடும்பங்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். மேலும், 3000 பேர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண்மை சார்ந்த தொழில்கள்

மாடு வளர்த்தல், அரிசி ஆலைகள் மற்றும் நார்த் தொழிற்சாலைகள் போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்கள் பெருமளவில் கணியூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.