குடித்தெரு மான்யத் துவக்கப் பள்ளி
வரலாறு : இப்பள்ளி, கி.பி. 1929 ஆம் ஆண்டிற்கு முன்பு திண்ணைப் பள்ளிக்கூடமாக திரு. K.A. சின்னச்சாமி பிள்ளை அவர்களால் நடத்தப்பட்டு வந்தது. பின்னர், கி.பி. 1929 ஆம் ஆண்டு அக்கால அரசாங்கத்தினால் நிரந்தர அங்கீகாரம் பெற்று, முறையான கல்வி நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. அதன்பின், கணியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்விச் சேவையாற்றி வருகிறது. சிறப்பு :சுமார் நூற்றாண்டு பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்ட இப்பள்ளி, கல்விச் சேவையில் சிறப்புடன் விளங்கி வருகிறது. இங்கு முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்கப்பட்டு, தற்போது சுமார் 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், 10 ஆசிரியர், ஆசிரியைகள் அர்ப்பணிப்புடன் கல்வித் தொண்டாற்றி வருகின்றனர்.குறிப்பாக, இப்பள்ளியில் தான் முன்னாள் அமைச்சர்கள் திரு. K.A. மதியழகன் மற்றும் திரு. K.A. கிருஷ்ணசாமி ஆகியோர் தங்களது ஆரம்பக் கல்வியைப் பயின்றனர் என்பது இப்பள்ளியின் பெருமையை வெளிப்படுத்துகிறது.
இஸ்லாமியா தொடக்கப்பள்ளி
கி.பி. 1885 ஆம் ஆண்டு திண்ணைப் பள்ளிக்கூடமாகத் தொடங்கிய இப்பள்ளி, கி.பி. 1929 ஆம் ஆண்டு அரசு அங்கீகாரம் பெற்று முறையான கல்வி நிலையமாக வளர்ச்சி பெற்றது. இந்நிறுவனம், முஸ்லிம் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளியாகும்.

ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல் நிலைப் பள்ளி
வரலாறு: ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி முதன்முதலில் காரத்தொழுவு என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது. திரு. வெங்கட்ராமய்யர் அவர்களால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், “அமராவதி பூர்த்தியற்ற செகண்டரி பள்ளி” என அழைக்கப்பட்டது. பின்னர், கி.பி. 1898 ஆம் ஆண்டு இப்பள்ளி கணியூருக்கு மாற்றப்பட்டு, திரு. K.N. வெங்கட்ராமய்யர் அவர்களால் நடத்தப்பட்டது. கி.பி. 1908 ஆம் ஆண்டு, கொழுமம் எஜமானார் திரு. K. வெங்கடகிருஷ்ணய்யர் தலைமையில் செயல்பட்ட குழுவின் கீழ் இப்பள்ளி நிர்வகிக்கப்பட்டது; அப்போது இதன் பெயர் “இந்து மிடில் ஸ்கூல்” ஆக இருந்தது.கி.பி. 1921 ஆம் ஆண்டு, இந்நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. கி.பி. 1924 ஆம் ஆண்டு முதன்முறையாக மாணவர்கள் S.S.L.C. தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, கி.பி. 1925 ஆம் ஆண்டு பள்ளிக்குழுவின் ஒருமித்த முடிவின் பேரில், திரு. K. வெங்கடகிருஷ்ணய்யர் அவர்கள் முழுப் பொறுப்புடன் பள்ளியை ஏற்று, அதன் முதல் தாளாளராகப் பொறுப்பேற்றார்.கி.பி. 1932 ஆம் ஆண்டு அவர் மறைவடைந்ததையடுத்து, கோயம்புத்தூர் ஜில்லா போர்டு இப்பள்ளியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியது. அக்காலத்தில் இப்பள்ளி “ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மிடில் ஸ்கூல்” என அழைக்கப்பட்டது.கி.பி. 1946 ஆம் ஆண்டு, ஜில்லா போர்டு இப்பள்ளியை ஆரம்பப்பள்ளியாக மாற்ற முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் கொழுமம் எஜமானார் திரு. K.V. கணபதி சுப்பிரமணிய அய்யரை அணுகி, பள்ளிப் பொறுப்பை ஏற்க வேண்டிக் கொண்டனர். அவரின் தலைமையில், இப்பள்ளி மீண்டும் உயர்நிலைப் பள்ளி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல் மற்றும் குறைந்த விலையில் நெல் வழங்குதல் போன்ற பல நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.கி.பி. 1953 ஆம் ஆண்டு, திரு. K.V. கணபதி சுப்பிரமணிய அய்யர் அவர்கள் பள்ளியின் தாளாளராகப் பொறுப்பேற்று, அதன் புகழை மாவட்டம் முழுவதும் பரப்பினார். கி.பி. 1963 ஆம் ஆண்டு அவர் மறைவடைந்ததையடுத்து, அவரது துணைவியார் திருமதி கமலா கணபதி சுப்பிரமணியம் அவர்கள் பள்ளியின் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தினார்.கி.பி. 1987 ஆம் ஆண்டு, இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. இன்றளவும், கணியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்விச் சேவையாற்றி வருகிறது. இந்தப் பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானவை:
கி.பி. 1973–74 ஆண்டுகளில், யுத்த நிதி மற்றும் வெள்ள நிவாரண நிதிக்காக மாணவர்கள் வழங்கிய பெரும் அளவிலான நிதி குறிப்பிடத்தக்கது.30-01-1973 அன்று, 64 சென்ட் பள்ளி நிலம் பேருந்து நிலையம் அமைப்பதற்காக பஞ்சாயத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டது.மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் 20 அம்சத் திட்டத்தை, மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் பரப்பியமை பெரும் பாராட்டைப் பெற்றது. சிறப்பு நிகழ்வு: பள்ளியின் 112 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நிறுவனர் நாள் நினைவுச் சின்னத்தை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், “பாரத ரத்னா” டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள் 17 ஜூலை 2010 அன்று திறந்து வைத்து உரையாற்றியது இப்பள்ளியின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். கல்விச் சிறப்பு : கிராமப்புறங்களில் +2 தேர்வில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தேர்ச்சி விகிதத்தைப் பெற்ற மாணவர்களை உருவாக்கிய கல்வி நிலையமாக இப்பள்ளி திகழ்கிறது.